பதிவு செய்த நாள்
18
மார்
2014
10:03
ஊத்துக்குளி: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னிமலை அருகே, நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவிலில், நேற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தின் குளக்கரையில் நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு சென்னிமலை மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அதிகமாக வந்து, தரிசனம் செய்து செல்வர். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வதுபோல், இப்பகுதியில் பங்குனி திங்கள்கிழமை, நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரர், சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.நேற்று பங்குனி மாதப்பிறப்பின், முதல் திங்கள்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, இரண்டு மணிக்கு, கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இக்கோவில் பிரசாதமான வெள்ளரிக்காய்களை, பக்தர்கள் வாங்கிச் சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.