பதிவு செய்த நாள்
19
மார்
2014
11:03
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கோவிலை பிரபலப்படுத்த, பூமிக்கு அடியில் அம்மன் சிலை இருந்ததாக, நாடகமாடிய, பொன்னியம்மன் கோவிலூர் மக்கள், வருவாய் துறையினரிடம், எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததால், அம்மன் சிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அடுத்த நாட்டான் கொட்டாய் பொன்னியம்மன் கோவிலூரில் ஓம்சக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே அம்மன் சிலை ஒன்று பூமிக்கு அடியில் உள்ளதாக, பூசாரி வெங்கட்ராமன் என்பவர், 17ம் தேதி அதிகாலை அருள் வந்து வாக்கு கூறியுள்ளார். இதன்படி, பூசாரி கூறிய இடத்தில், குழி தோண்டி பார்த்த போது, சுமார் நான்கு அடி ஆழத்தில், ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை கிடைத்தது. இதனை ஊர் பொதுமக்கள் எடுத்து கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதுகுறித்து, சுண்டேகுப்பம் வி.ஏ.ஓ., குப்தபிரவர்த்தனனுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற அவர், தாதில்தார் மற்றும் ஆர்.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தார். பொதுவாக, பூமிக்கு அடியில் கிடைத்த புதையல் மற்றும் சாமி சிலைகள், வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்படும். ஆனால், பொன்னியம்மன் கோவிலூரில், பூமிக்கு அடியில் இருந்த சிலையை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க, பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கோவிலுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். நேற்று காலை தர்மபுரி தொல்லியல் துறை அலுவலர் திருமால் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை ஆய்வு செய்து, இது, பழங்காலத்து சிலை இல்லை என்றும் வெண்கல தகட்டினால், தற்போது செய்யப்பட்ட புது சிலை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, பூசாரி வெங்கட்ராமன், ஊர் கவுண்டர்கள் சின்னசாமி, நாராயணன், நேரு, தர்மலிங்கம் ஆகியோர், கோவிலை பிரபலபடுத்த புதையல் நாடகமாடியது தெரியவந்தது. இதுபோன்ற, செயல்களில், இனிமேல் ஈடுபட மாட்டோமென, கோவில் நிர்வாகிகள் எழுதி கொடுத்ததால், வதந்திக்கு முற்றுப்பள்ளி வைக்கப்பட்டது.