பாழடைந்த கிணற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2014 11:03
நாகர்கோவில் : குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே மலயின்கீழ் மணியவிளை பகுதியில் வசிப்பவர் பாஸ்கரன் நாடார். இவரது வீட்டு வளாகத்தில் கிணறு உள்ளது. இந்த கிணறு கடந்த 18 ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது தொழிலாளர்கள் கிணற்றின் உள்ளிருந்து மண்ணை வாரி, அதை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றின் உள்ளே 2 சிலைகள் கிடப்பதை கண்டனர். உடனே அவற்றை வெளியே எடுத்த போது அவை கணபதி, முருகன் சிலைகள் என தெரிய வந்தது. முருகன் சிலை 16 கிலோ எடையிலும், கணபதி சிலை 14 கிலோ எடையிலும் காணப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சப்இன்ஸ்பெக்டர் ரியாஸ் ராஜா தலைமையில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து சிலைகளை கைப்பற்றி காட்டாக்கடை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் தமிழக சிற்பகலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவை பல நூற்றாண்டுகாலம் பழமையானவை எனத் தெரிகிறது. தென்னிந்திய கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கலைகள் வடிவத்தில் காணப்படுகின்றன. எனவே இந்த சிலைகள் திருட்டு சிலைகளா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், கிணற்றில் இருந்து அள்ளிய மண்ணையும், கிணற்றையும் முழுமையாக பரிசோதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கிணற்றின் உரிமையாளர் பாஸ்கரன் நாடார் சமீபத்தில்தான் அந்த இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கு முன்பு இந்த இடம் வேறொரு குடும்பத்தினரின் சொத்தாக இருந்தது. சாமி சிலைகள் பாழடைந்த கிணற்றில் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.