திருப்பரங்குன்றம் : திரப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் இன்று(மார்ச் 20) நடக்கிறது.மார்ச் 7ல் பங்குனித் திருவிழா துவங்கியது. நேற்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சைகுதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கிரிவீதியில் பச்சைக் குதிரை ஓட்டம் முடிந்து, கீழத்தெருவில் கிராமத்தினர் சார்பில் பச்சைக் குதிரைக்கு களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இரவு 8 மணிக்கு, கோயில் திருவாட்சி மண்டபத்தில். தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி ஹோமம் வளர்க்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பட்டாபிஷேக அலங்காரத்தில் எழுந்தருளினர். பூஜைகள் முடிந்து, கீரிடத்திற்கு புனித நீர் அபிஷேகமாகி, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இன்று பகல் 12.30முதல் 12.45மணிக்குள் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.