பதிவு செய்த நாள்
20
மார்
2014
10:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், அசம்பாவிதம் தடுக்க 3 நுழைவு கோபுரம், திருச்சுற்று மாளிகை உள்பட்ட, 32 இடங்களில் ஒரு கோடியே 10 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் தொல்லியல்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சை பெரியகோவிலை கற்களை கொண்டு, முதலாம் ராஜராஜன் கட்டினார். ஆயிரம் ஆண்டு கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது. இதைப் பார்த்து, பல லட்சம் பக்தர்கள், பயணிகள் அதிசயித்து செல்கின்றனர். வெளியூர் மாவட்டத்தினர், வெளிநாட்டினர் அதிகமாக வருகின்றனர். குறிப்பாக, இலங்கை நாட்டினர் வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ளதால், பெரியகோவிலையும் பார்த்துச் செல்கின்றனர். பெரிய கோவிலில் 3 நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இதில், வெளியே இருந்து நுழையும் 3வது நுழைவாயிலில் ஒரு எஸ்.ஐ., தலைமையில் ஆண், பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மெட்டல் டிடெக்டர் கருவியும் வைத்து, பயணிகள் உடமை பரிசோதிக்கப்படும்.
புராதன சின்னமான கோவிலின் பாதுகாப்பு கருதி 3 நுழைவாயில்கள் மற்றும் திருச்சுற்று மாளிகை உள்பட 32 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தொல்லியல்துறையினர் தீர்மானித்தனர். இதுகுறித்து, தஞ்சை தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியகோவிலில் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதம் தவிர்க்கவும், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நுழைந்து, விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டால், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்பு கேமரா அவசியம் என, தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்காணிப்பு கேமரா, 32 இடங்களில் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகள், இம்மாதம் இறுதிக்குள் முடிந்து விடும். கோவில் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில், கம்ப்யூட்டர் மானிட்டரில் போலீஸார், ஹிந்து அறநிலையத்துறை, தொல்லியல்துறையினர் அமர்ந்து, கண்காணிக்க முடியும். விழா, விசேஷ காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களையும் அடையாளம் கண்டு, மடக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.