பதிவு செய்த நாள்
20
மார்
2014
12:03
மதுரை : மதுரை குன்னத்துார் சத்திரத்தில் இருந்த மரகதலிங்கம் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்க, மேலும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுகுன்னத்துார் சத்திரத்தில் பச்சைநிற மரகதலிங்கம் இருந்தது. திருமங்கலம் குன்னத்துாரை சேர்ந்த ஜமீன்தார் அதை தானமாக வழங்கினார். பராமரிப்பு பணிகள் எனக்கூறி, 2009 ல் சத்திரத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. அப்போது மரகதலிங்கம் மாயமானது; அதன் மதிப்பு 1000 கோடி டாலர். தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி ஆர்.சுப்பையா முன், விசாரணைக்கு மனு வந்தது. தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: மனுதாரர் புகார் பற்றி வக்கீல்கள், சத்திரத்தை நிர்வகித்தவர்கள், சத்திரம் அருகே கடை நடத்தியவர்கள் உட்பட 16 பேரிடம் விசாரித்தோம். வக்கீல்கள் 3 பேர் தான், மரகதலிங்கம் இருந்ததாக கூறினர்.எம்.குன்னத்துார், டி.குன்னத்துாரில் விசாரித்தபோது, சத்திரம் மற்றும் அதன் நிர்வாகிகள் பற்றி தெரியாது என்றனர். மடத்தை நிர்வகித்தவர்கள், பச்சை லிங்கம் இருந்தது. மாநகராட்சியில் இருந்த லிங்கம் தான், சத்திரத்தில் இருந்தது, என்றனர். கடை நடத்தியவர்கள்,லிங்கம் பற்றி எதுவும் தெரியாது, என்றனர்.லிங்கத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அதன் வயது பற்றி ஆய்வு செய்யவில்லை. சிலர், பச்சை வண்ண லிங்கம் இருந்தது என்று கூறியதையே, மரகதலிங்கம் இருந்ததாக கருதுகின்றனர்.சத்திரத்தை இடிக்கும்போது, அங்கிருந்த பொருட்களின் பட்டியலில் மரகதலிங்கம் பற்றிய குறிப்பு இருந்தது. அதுதான், மரகதலிங்கம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரம் இல்லை. மாநகராட்சி வசம் உள்ள லிங்கத்தின் வயது பற்றி, முடிவு செய்ய வேண்டியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் மேலும், விசாரிக்க வேண்டியுள்ளது, என குறிப்பிட்டார்.நீதிபதி, "போலீசார் விசாரிக்க, மேலும் இரு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது,” என்றார்.