பதிவு செய்த நாள்
25
மார்
2014
10:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு குண்டம் விழா, நேற்று மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில், குண்டம் விழாவில், கடந்த, 18ம் தேதி அதிகாலை, 3.45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி ராஜசேகர், தீ மிதித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்தனர். கடந்த, 19ம் தேதி புஷ்பரதமும், 20ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. கடந்த, 21ம் தேதி திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லட்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டு குண்டம் விழாவின் இறுதி நிகழ்ச்சியான மறுபூஜை விழா, நேற்று நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கே பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதையடுத்து சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவுக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவை அறநிலைத்துறை இணை ஆணையர் நடராஜன் தலைமையில் செய்திருந்தனர்.