மேல்மலையனூருக்கு பஸ் பற்றாகுறை: விழுப்புரத்தில் பக்தர்கள் கடும் அவஸ்தை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2014 11:03
விழுப்புரம்: மேல்மலையனூர் கோவிலுக்கு செல்வதற்கு போதிய பஸ்கள் கிடைக்காமல் விழுப்புரத்தில் பக்தர்கள் அவதியடைந்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு நடக்கின்ற ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் மேல்மலையனூர் கோவிலுக்கு அமாவாசை தினத்தில் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று அமாவாசையை யொட்டி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 2:00 மணி முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பயணிகள் கூட்டம் படிப்படியாக அதிகரித்ததால், மேல்மலையனூர் செல்லும் பஸ்கள் படிகளில் நிற்பதற்கும் இடமின்றி பயணிகள் அவதியடைந்தனர். விழுப்புரம் பஸ் நிலையத்திற்கு வந்து புறப்பட்ட மேல்மலையனூர் சிறப்பு பஸ்களில் பக்தர்கள், முண்டியடித்து ஏறி செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டது.