பதிவு செய்த நாள்
03
ஏப்
2014
11:04
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த மணியம்பாடியில் பழமையான வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் புதுப்பிக்கப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த மணியம்பாடியில் மூக்கனூர் மலை அடிவாரத்தில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில், வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உள்ளது. 1285ம் ஆண்டு, பையம்மா ராணி என்பவரால் இக்கோவில் கட்டியதாக கிழக்குபுறம் உள்ள கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கோவில் தோன்றி, 700 ஆண்டுகள் ஆகிறது. நாயக்கர் மன்னர் காலத்தில் இப்பகுதியில் பட்டயகாரர்களாக இருந்தவர் ஜெகதேவராயர் என்பதையும், அவர் அருளையர், குருளையர் மூலம் ஸ்வாமி இப்பகுதியில், எழுந்தருளி உள்ளதை உணர்ந்து, இக்கோவிலை கட்டி, மாலை கட்டிகளை ஸ்வாமிக்கு பூஜை செய்யும் உரிமையை வழங்கி உள்ளார். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின், முன் மதில் சுவரில், வலது மற்றும் இடது புறமும் நாயக்கர் மன்னர் கால சிற்ப கலையை எதிரொலிக்கிறது. மகளிர் சிலையும், அரசன் சிலையும் உள்ளது. நான்கு தீபஸ்தம்பங்கள் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாதம் பவுர்ணமியில் பிரமோற்சவம் தேரோட்டமும், புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் ஒரு கால பூஜைகள் நடந்து வருகிறது. இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் கோவிலின் சுவர்கள் பாதிப்பு அடைந்ததால், கோவிலை புதிதாக பராமரிப்பு பணியில் ஈடுபட்ட கோவில் நிர்வாகிகள் ஜெயவேல், மணி, பி.சி.ராமன், சேலம் கமலம்மாள், ஒமேகாபிரபு, முரளி மற்றும் ஒடசல்பட்டி புதூர், மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி, பூசநாயக்கனஅள்ளி ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்களிப்போடு கோவில் அமைந்துள்ள பகுதிகளை புதுப்பிக்கும் பணி, 1.75 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில், சொர்க்கவாசல், கோவில் கருவறை, ஏழு கோபுரங்கள், கல் தூண் மண்டபம், திருமண, 16 கால் மண்டபம், கட்டப்பட்டு வருகிறது. கோவில் தேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தெப்பகுளம் தூர்வாறப்படுகிறது. இக்கோவிலை, சுற்றுலா தலமாக்க வேண்டுமென, அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.