பதிவு செய்த நாள்
03
ஏப்
2014
11:04
கிருஷ்ணகிரி: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருவிழாவையொட்டி, ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள சிந்தகம்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரகம் எடுத்து செல்லும் பூசாரி வேண்டுதலுக்காக, பக்தர்கள் மீது நடந்து செல்லும் வினோத நிகழ்ச்சி நடந்தது. ஆந்திர மாநில எல்லையோர கிராமமான சிந்தகம்பள்ளியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, தெலுங்கு வருட பிறப்பான யுகாதி திருவிழாவுக்கு அடுத்தநாள் நடக்கும். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது நேற்று, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து, அலங்கரிக்கப்பட்ட பூங்கரகத்தை பூசாரி தலையில் சுமந்து வீடு வீடாக சென்றார். அப்போது, ஒவ்வொரு வீட்டிலும், கரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஒரு சிலர் வேண்டுதலை நிறைவேற்ற ஆடுகளை பலியிட்டனர். இதனையடுத்து, கோவில் வளாகத்தில் குழந்தை வரன் வேண்டி, திருமணம் நடக்க வேண்டி மற்றும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வேண்டி ஆண்கள், பெண்கள் வரிசையாக, ஈரத்துணியுடன் படுத்திருந்தனர். அப்போது, கரகம் எடுத்து வந்த பூசாரி, அருள் வந்து படுத்திருந்த, பக்தர்கள் மீது ஏறி நடந்து சென்றார். பூசாரி பாதம் படும்பவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களான சிவராஜ், கூத்தரசன், குல்லிகான் என்கின்ற சிவா, வேல்முருகன், மாருதி, சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதனையடுத்து, தீமிதி விழாவும், சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை முன்னிட்டு, சிந்தகம்பள்ளி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி விளையாடினர். விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, ஆந்திர மாநில எல்லையோர கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.