பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
10:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவான நேற்று, பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல்படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து, இன்று அக்னிச்சட்டி, நாளை(ஏப். 8) தேரோட்டமும் நடக்கிறது. விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அம்மன், தினம் பல மண்டக படிகளில் எழுந்தருள, வீதிஉலா நடந்தது. ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி, 21 நாட்கள் விரதம் இருந்தனர். பக்தர்கள் தினமும் கொடி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி, அம்மனை வழிபட்டு வந்தனர். பொங்கல் விழாவான நேற்று, கோயிலின் முன், வீடுகளிலும், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிப்பட்டனர். இதை தொடர்ந்து, அம்மன், கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மண்டபத்தில் எழுந்தருள,பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும் வந்தனர். இது போல், இன்றும், நகர், கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி , வாயில் சூலம் குத்தியும், கரகம், ரதம் இழுத்தபடி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதன்பின், நாளை மாலை, வெயிலுகந்தம்மன் மற்றும் மாரியம்மன், திருதேரில் எழுந்தருளும் திருதேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்துள்ளது.