மடத்துக்குளம் : பெருமாள் கோவிலையும், கோவிலை சுற்றி உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தையும் அற நிலையத்துறையினர் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் தற்போது பராமரிப்பு இன்றி உள்ளது. இதில் காரத்தொழுவில் அமைந்துள்ள பூமிநிலாசமேத யகல்யாணவரதராஜபெருமாள் கோவிலும் ஒன்று. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 1000 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போதும் நல்ல நிலையில் உள்ளது. மெயின் ரோட்டில் (காரத்தொழுவு-மடத்துக்குளம்) ஒரு ஏக்கர் இடபரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது இந்த பகுதியில் சென்ட் ஒரு லட்சம் வரை விற்பனையாகிறது. அதனால், தற்போது கோவிலை சுற்றி உள்ள இடமே ஒரு கோடி ரூபாய் மதிப்பீடாக உள்ளது. தற்போது இந்த இடம் பல்வேறு முறை களில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, பல லட்சம் மதிப்புமிக்க இடத்தின் மையத்தில் உள்ள கோவிலையும், இடத்தையும் தங்கள் நிர்வாகத்தில் எடுக்க வேண்டும் என்றனர்.