பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
பவானி: பவானி, காசிவிஸ்வநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. பவானி தேர்வீதியில் அமைந்துள்ள, சின்னகோவில் என்று அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த, ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 16ம் தேதி வரை, 12 நாட்கள் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது. அதனால், தினமும் காலை, பத்து மணிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு, ஏழு மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடக்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக, இன்று, இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், 13ம் தேதி அதிகாலை, ஐந்து மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், காலை, 8.30 மணிக்கு திருத்தேர் திருவீதி உலாவும், 16ம் தேதி காலை மஹா தரிசனமும், மாலை மஞ்சள் நீர் உற்சவமும் நடக்க உள்ளது.
* இதேபோல, பவானி, தலைமை போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள, ஸ்ரீபழனியாண்டவர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நண்பர்கள் குழு சார்பில் நடக்க உள்ளது. வரும், 13ம் தேதி காலை, எட்டு மணிக்கு, கூடுதுறையில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம், சந்தனகுடம் போன்றவைகளுடன், மேளதாளத்துடன் முக்கிய வீதிகள், வழியாக கோவில் வந்து அடைகிறது. அன்று, காலை, 11 மணிக்கு ஸ்ரீபழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை, ஐந்து மணிக்கு சிறப்பு அலங்கார தரிசனமும், இரவு, 7.30 மணிக்கு புஷ்ப பல்லக்கில், அழகிய மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.