பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
11:04
பரமக்குடி : நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பக்தி பரவசத்துடன் நடந்தது. பரமக்குடி அருகே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உருவான இந்த கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய சிறப்பு வாய்ந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோயில் முழுவதும் கருங்கல்லில் பூசப்பட்டிருந்த சுண்ணாம்பு பெயர்த்து எடுக்கப்பட்டு, ஆயில் பூசி புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டப்பட்டிருந்த பள்ளியறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதே போல் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து பரிவார கோபுரம், பிரகாரத்தில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 4 ல் கும்பாபிஷேக விழா துவங்கி, தொடர்ந்து ஐந்து கால யாக பூஜைகள் நிறைவடைந்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. பின்னர் புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, காலை 9.15 மணிக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பரமக்குடி, ராமநாதபுரம், இளையான்குடி, மதுரை, சென்னை மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர். நயினார்கோவில் முழுவதும் ஆங்காங்கே நீர், மோர் பந்தல், பொங்கல், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதிராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், பொறுப்பாளர் தெய்வச்சிலைராமசாமி செய்திருந்தனர். நயினார்கோவில் ஒன்றிய கவுன்சிலர் பழனிஜெகதீஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் நாகவள்ளி(நயினார்கோவில்), பூமிநாதன்(வாணியவல்லம்), முதல்நிலை ஒப்பந்தகாரர் காந்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூமா, அறிவானந்தபாண்டியன் மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்வராஜ், சேவாபாரதி நவசக்தி, கணபதி, சுகுமாறன், லோகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.