பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் ஜூன் 21ம் தேதி ராகுபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். தேவாரப்பதிகங்களால் பாடல் பெற்றது. சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் இராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. தனது சாபத்தை போக்குவதற்காக நாகநாதபெருமானை மாசி மகாசிவராத்திரி நாளில் ராகு வழிபட்டார். ராகுவின் பூஜையை மெச்சிய சிவபெருமான், "என்னருள் பெற்ற நீ, என்னை வழிபட்டு பின் உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், திருமணதோஷம் ஆகியவற்றை நீக்கியருள்வாய் என, வரமளித்தார்.
பிருங்கி முனிவர் இறைவனை மட்டுமே வணங்கி உமையை வழிபடாதிருந்தார். இதனைக்கண்டு சினந்த உமையம்மை முனிவரின் இரத்தத்தை எடுத்தார். அப்பொழுது கீழே விழும் நிலையில் இருந்த முனிவருக்கு சிவபெருமான் ஊன்றுகோல் கொடுத்து உதவினார். இவ்வாறு உதவ காரணம் என்ன என வினவியதற்கு சிவபெருமான் கிரிகன்னிகை வனத்தில் தவம் இருக்கும் காலத்தில் அதனை கூறுவேன் என்றார்.
அவ்வாறு உமையம்மையும் இங்கு வந்து தவம் இருந்தாள். உமையம்மையுடன் லட்சுமியும், சரஸ்வதியும் உடன் இருந்தனர். இதை மெச்சிய சிவபெருமான் உமையொரு பாகனாக இங்கு காட்சி தந்தார்.
இந்திரன் அகலிகையின் மீது கொண்ட காமத்தினால் கௌதவ முனிவரின் சாபத்திற்கு ஆளானார். சாபம் நீங்க கிரிகுஜாம்பிகைக்கு தை முதல்நாளில் புனுகுசட்டம் சாத்தி இந்திரன் வழிபட்டுள்ளார். இதையொட்டி இன்றும் தை முதல் நாள் மற்றும் ஆடி முதல்நாளில் புனுகு தைலத்தினால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
ராகுவை பாலபிஷேகம், உளுந்து சாதம் மற்றும் தோஷங்களுக்குரிய விளக்குகளை ஏற்றி வழிபட்டால் நமது துன்பங்களை நீக்குவார். இத்தலத்தில் மட்டுமே ராகுபகவான், நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக வீற்றிருக்கின்றார்.
இங்கு இராகுவுக்கு பாலபிஷேகம் நடைபெறும் போது அப்பாலானது நீலநிறமாக மாறும். பாதத்தை அடைந்தவுடன் மீண்டும் வெண்மையாக மாறிவிடும் அற்புத நிகழ்வு இன்றும் நடந்து வருகிறது.
சிறப்புமிக்க இவ்வாலயத்தில் வருகிற ஜூன் 21ம் தேதி சனிக்கிழமை காலை 11.12 மணிக்கு ராகுபகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
ராகுபெயர்ச்சி முன்னிட்டு தோஷ பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, துலாம், கும்பம், மீனம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்காக சிறப்பு லட்சார்ச்சனை ஏற்பாடு செய்யப்பட்டு ஜூன் 16ம் தேதி முதல் 19ம் தேதி முடியவும், 23ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் லட்சார்ச்சனை நடக்கிறது.
ராகுபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.