பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
01:04
பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... என்ற சரண கோஷத்துடன், பழநியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நடந்தது. பால்குடங்கள், தீர்த்தக் காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். பழநி, பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள், மயில்காவடி, தீர்த்தக்காவடி, பறவைக்காவடி, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆடியும், உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின், ஏழாம் நாளான நேற்று, பங்குனி உத்திர தேரோட்டத்தை ஒட்டி, அதிகாலையில் சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, தீர்த்தம் வழங்குதல் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன் தந்தப் பல்லக்கில் திருவுலா வந்தார். முற்பகல், 11:30 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில், திருத்தேரில் சுவாமி தேரேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு, மாலை 4:20 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது. நான்கு கிரிவீதிகள் வழியாக, தேர்வலம் வரும்போது, பக்தர்கள் நவதானியங்கள், பழங்கள், நாணயங்களை தேரில் வீசி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... என சரணகோஷம் எழுப்பினர். மாலை, 6:15 மணிக்கு தேர்நிலையை அடைந்தது. இன்று இரவு, 9:00 மணிக்குமேல் வையாபுரி குளக்கரையில் வாணவேடிக்கையும், 10:00 மணிக்கு மேல், தங்கக் குதிரை வாகனத்தில், முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவுலாவும் நடக்கிறது.