பதிவு செய்த நாள்
15
ஏப்
2014
02:04
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர், குமரகோட்டம் முருகன் உட்பட, மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை ஒட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறையில் அம்மனுக்கு முன், பல வகையான பழங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. வரதராஜபெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் ஆகியோருடன் பெருமாள், கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். தொடர்ந்து, உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள், மாடவீதிகளில் வலம் வந்தார். ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு, வடை, பாயாசத்துடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. குமரகோட்டம் முருகன் கோவிலில், காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு, வெள்ளி தேரில் முருகர், கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்.
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் உற்சவருக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில், இரவு 11:00 மணிக்கு துவங்கி, 63ம் ஆண்டு திருப்படி திருவிழா நடந்தது. ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, திருவாசக தேவார பாடல்களுடன் பூஜை செய்து வணங்கினர். இரவு, 12:00 மணியளவில் புத்தாண்டு பிறப்பு சொற்பொழிவும், பக்தி பாடல்கள் கச்சேரியும் நடந்தன. செம்பாக்கம் ஜெம்புகேஸ்வரர் கோவில், எல்லைஅம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.