பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
02:04
ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் சின்ன காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 8:30 மணிக்கு, மங்கள வாத்தியங்களுடன் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட கேடய வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி, ராஜ வீதிகளில், உலா வந்தார். அதை தொடர்ந்து, ஆதிகேசவ பெருமாள், மாலையில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். அஷ்டபுஜ பெருமாள் கோவில்: சின்ன காஞ்சிபுரம் பகுதியில், புஷ்ப வல்லி தாயார் உடனுறை அஷ்டபுஜ பெருமாள் பெருமாள் கோவில், சித்திரை மாத பிரம்மோற்சவம், நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் உற்சவமாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய், அஷ்டபுஜ பெருமாள், முக்கிய வீதிகளில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மாலை 6:30 மணிக்கு, சிம்ம வாகன உற்சவம் நடந்தது. நாளை, கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.