கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்படி பூஜை நடந்தது. முருகனின் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுவாமிக்கு தங்ககவசம், வைரவேல், வைரகிரீடம் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மற்ற சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமிமலை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர், திருச்சி உள்பட பல பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். மதியம், 12 மணியளவில் கோவிலில் அமைந்துள்ள தமிழ்வருட தேவதைகளின் பெயர்களை கொண்ட, 60 திருப்படிகளுக்கு குத்துவிளக்கேற்றி திருப்படி பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.