பதிவு செய்த நாள்
23
ஏப்
2014
02:04
தேடித் தெரிந்துகெள்வதில் ஆர்வம்! அப்படித் தெரிந்து கொண்டதால் எந்தவிதமான பலனும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தாலும், நமக்கு அது தெரியும் என்று ஒரு திருப்தி அவ்வளவு தான்! அப்படி இருக்கும் போது, நமக்காக- நம் நல்வாழ்வுக்காக, நமது முன்னோர் எழுதிக் குவித்து வைத்து இருப்பதை அறிந்து கொண்டால், நமக்கு ஏற்படும் திருப்தி இருக்கிறதே.. அது அளவிட முடியாதது. அந்த பொக்கிஷங்கள் நமக்கு மட்டுமல்ல, நம் சந்ததிக்கும் நல்வாழ்வை அளிக்கக்கூடியவை. அந்த ஞான நூல்களின்படி இக்காலத்தில் நடக்க முடியுமா என்று எண்ண வேண்டாம். அதற்காக அலட்சியமும் வேண்டாம். சுழல் ராட்டிணத்தில் இப்போது கீழே இருக்கும் நாம், அடுத்ததாக மேலே வந்துதான் ஆக வேண்டும் . அப்போது இந்த நூல்கள் கலங்கரை விளக்கம் போலக் காரிருளைத் துரத்தும்.
அப்படிப்பட்ட ஒளிவீசும் ஒரு நூல், சைவசமய நெறி. இந்த நூல் ஆசாரியர் இலக்கணம், மாணவர் இலக்கணம், பொது இலக்கணம் என மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. ஆசிரியர் இலக்கணம் பகுதி, தீஷைகள் குறித்து விளக்குகிறது. வாசிக தீஷை, மானச தீஷை, சாத்திர தீஷை, யோக தீஷை என தீஷைகளிலே பலவகை உண்டு. சீடனின் பக்குவம் பார்த்து தீஷை அளிக்க வேண்டும் அதிலும்....
தேர்ந்தறிக பக்குவத்தை நிர்வான தீக்கைக்குத்
தேர்ந்திடேல் ஏனைய தீக்கைக்கு (பாடல் எண்:66)
மிகவும் உயர்ந்ததான நிர்வாண தீஷைக்கு,பக்குவம் பார்த்துதான் தீஷை அளிக்க வேண்டும். மற்ற தீஷைகளுக்கு, இது தேவைஇல்லை. நிர்வாண தீஷையை 12.9.63 வருட காலங்களில் சீடனின் பக்குவ நிலை. அறிந்து அளிக்க வேண்டும்.
இந்த விதம் ஈரானு ஆண்டு எண்ணித்திரிவும் அறப்
பந்தம் அறுத்தாள்க பரிந்து
பண்ணிடுக தீக்கையினைப்பக்குவம் பார்த்து ஆறிரண்டுள்
எண்ணிமும்மூன்று ஆறின் மூன்றின் (பாடல் எண்: 69-70)
இப்படி, தீøக்ஷ வகைகளைச் சொல்லி அதற்கு உண்டான கால விவரங்களையும் கூறும் இந்த நூல், தீøக்ஷக்கு உண்டான ஒரு முக்கியமான தகவலையும் விவரிக்கிறது.
சீடனின் பக்குவத்தைப் பார்த்துத்தான் தீஷை செய்ய வேண்டுமே தவிர, இவன் அரசன், உயர்ந்த பதவியில் இருப்பவன், அதிகாரம் உள்ளவன் என்ற பயத்தாலோ, இவன் பிள்ளை, உறவினன் என்றெல்லாம் பார்த்து ஆர்வத்தாலோ, இவன் பணக்காரன் , நிறைய பொன்- பொருள் தருவான் என்ற அபிமானத்தாலோ, மற்றமுள்ள ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவோ தீøக்ஷ செய்யக் கூடாது. மீறிச் செய்தால் என்னவாகும் தெரியுமா?
அச்சத்தால் ஆர்வத்தால் ஆடகத்தால் மற்றமுள
இச்சையினால் தீக்கை இயற்றின்
வீழ்வர் நிரயத்து இருவரும் வீழ்ந்து அழுங்கி
ஆழ்வாரவர் ஏறல் அரிது ஆங்கு (பாடல் எண்: 74-75)
தீøக்ஷசெய்த ஆசாரியானும் தீøக்ஷ பெற்ற சீடனும் (இருவரும்) நரகத்தில் வீழ்வார்கள்; மீள்வது கடினம் ! இதற்கு மேலும் தீøக்ஷ வகைகளை விரிவாகச் சொல்கிறது இந்த நூல்.
மாணவர் இலக்கணத்தைச் சொல்லும் போது அவன் பக்குவம் பெறுவதற்கு உண்டான வழிமுறைகளைச் சொல்கிறது.
அதில் ஒன்றாக... வழிபாட்டுக்கான மலர்களை சீடன் எடுத்து வைக்க வேண்டும் என ஆரம்பித்து, மலர்களைப் பற்றிய பல தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
பொழுது விடிவதற்கு முன்னால் மூன்று நாழிகை (72 நிமிடங்கள்) தொடங்கி, சூரிய உதய காலம் வரையில் எடுக்கப்படும் மலர்களை வழிபாட்டுக்கு உத்தமம்.
பூஜை செய்யும் போது உதய கால பூஜைக்கு நந்தியாவர்த்தப்பூ, வெள்ளெருக்கம் பூ உத்தமம். மத்தியான பூஜைக்கு அலரிப்பூ, தாமரைப்பூ, தும்பைப்பூ ஆகியவை உத்தமம். சாயங்காலம் பூஜைக்கு மல்லிகைப்பூ, கருமத்தம் பூ, சண்பகப்பூ ஆகியவை உத்தமம். அர்த்த ராத்திரி பூஜைக்கு கடப்பம்பூ,பொன்மத்தம்பூ, சிறு செண்பகப்பூ, பிச்சிப்பூ ஆகியவை உத்தமம். மலர்களை விவரிப்பதுடன் வில்வம் - துளசி ஆகியவற்றைப் பறிக்கும் காலத்தையும் இந்நூல் விவரிக்கிறது. மேலும் பூஜா காலங்களில் எவ்வெப்போது எந்தெந்த ராகங்கள் பாட வேண்டும் என விவரித்து, தூப - தீபங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கிறது. தூபங்களைப் பற்றிய தகவல்கள்: குங்கிலியம்2 பங்கு, அகில்பொடி ஒரு பங்கு, சந்தனப்பெடி 3 பங்கு ஆகியவற்றுடன், கற்பூரத்தூள் சிறிது கலந்து, அந்த கலவையை தழலில் இட்டு தூபம் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட தூபம் மீதாரி எனப்படும். இதைத்தவிர இன்னும் பலவிதமான தூபங்களும் குறிப்பிடப்படுகின்றன.
அடுத்து சிவலிங்க வகைகள்....
பச்சை மண்ணால் ஆன லிங்கம், சுட்டமண் லிங்கம், மரலிங்கம், கல் லிங்கம், செம்பு முதலான உலோகங்களால ஆன லிங்கம், ரத்தின லிங்கம், மணி லிங்கம், பாண லிங்கம், ரச லிங்கம், சுயம்பு லிங்கம் எனப் பல வகையான சிவலிங்கங்கள் உண்டு. இவற்றில் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது...
பச்சை மண்ணாலான சிவலிங்கத்தை விட சுட்ட மண்ணாலான சிவ லிங்கம் -10 மடங்கு அதிகம் உயர்ந்தது.
மண்ணாலான சிவ லிங்கம் -10 மடங்கு அதிகம்.
அதைவிட மர லிங்கம் - 10 மடங்கு அதிகம்.
அதைவிட கல்லிங்கம் -10 மடங்கு அதிகம்.
அதைவிட உலோக லிங்கம் -100 மடங்கு அதிகம்.
அதைவிட ரத்தின லிங்கம் -அளவிட முடியா அளவு அதிகம்..
அதைவிட மணி லிங்கம் -லட்சம் மடங்கு அதிகம்.
அதைவிட பாண லிங்கம் - கோடி மடங்கு அதிகம்.
அதைவிட ரச லிங்கம் - கோடி மடங்கு அதிகம்.
அதைவிட, சுயம்புலிங்கம் - மிகவும் உயர்ந்தது.
மண் சுட்ட மண் மரங்கல் வன்செம் பெழு வாயு
மொண்மை யிரத்தினந் தானும்
மணிவாண லிங்க மிரதஞ் சுயம்பு தானு.
மெணிலிவை யொன்றுக்கு ஒன்னு ஏற்றம் (பொது இலக்கணம் 80-81)
இந்தத் தகவல்கள் மட்டுமின்றி ருத்ராட்ச சிறப்புகள், ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் பலன்கள், ஆகமங்கள், நைவேத்தியங்கள் உட்பட இன்னும் பல விவரங்களை விளக்குகிறது இந்நூல்.
சிதம்பரம் மறைஞான சம்பந்த நாயனார் அருளிச் செய்த இந்த நூலுக்கு, யாழ்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார் பக்தர்கள் எல்லோரிடமும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இது.