கும்பகோணம்: குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகதோஷ பரிகாரத்தலம் என்றெல்லாம் போற்றப்படும் கும்பகோணம் பிரகன்நாயகி உடனாய நாகேசுவரசுவாமி கோவிலில் சூரியபூஜை துவங்கியது. மகாமக திருவிழா தொடர்புடைய, 12 சிவன்கோவில்களில் திருக்குடந்தை கீழ்க்கோட்டம் என்றும், நாகதோஷ பரிகாரத்தலம் என்று போற்றப்படுவதாக கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோவில் திகழ்கிறது. மகாபிரளய காலத்தில் அமிர்தகுடம் உடைந்து சிதறியபோது இத்தலத்தில் வில்வம் சிதறி விழுந்ததால் இங்கு இறைவன் வில்வனேசராக எழுந்தருளினார் என்றும், உலக பாரதத்தை தாங்க தியற்ற நாகராஜன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வில்வனேனசரை பூஜை செய்து அருள்பெற்றதால், நாகராஜன் வேண்டுகோளுக்கிணங்க நாகேஸ்வரர் என்ற பெயருடன் விளங்குவதுடன், நாகதோஷ பரிகாரத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரகன்நாயகி உடனாய நாகேசுவரரை உலகிற்கு வெளிச்சத்தை அளிக்கும் சூரிய பகவான் வழிபடுவதாக ஐதீகம். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 11ம்தேதி முதல், 13ம் தேதி வரை சூரியபகவான் கதிர்களால் சிவலிங்கத்தின் மீது பட்டு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு சூரியன் தனது கதிர்களால் கடந்த 24ம் தேதிகாலை சூரியோதய நேரத்தில் நாகேஸ்வரரான சிவலிங்கத்தின் மீது தனது கதிர்களால் பட்டு வழிபடும் நிகழ்ச்சி துவங்கியது.இதை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.