பதிவு செய்த நாள்
28
ஏப்
2014
12:04
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே மழை வேண்டி, விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்க வைத்து, நுாதன முறையில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்டது செல்லாண்டி கவுண்டன்புதுார் கிராமம். இங்குள்ள, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தடி விநாயகருக்கு, 50 ஆண்டுகளுக்கு முன் கோவில் கட்டப்பட்டது.வறட்சியில் வாடும்போது, விநாயகருக்கு நுாதன முறையில் வழிபாடு செய்வது, இப்பகுதி மக்கள் வழக்கம். கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியால் பயிர்கள் வாடி வருவதால், மழை வேண்டி விநாயகர் வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.அதன்படி, விநாயகர் கோவில் கருவறை முன், சிறு தொட்டி கட்டி கருவறையின் முன்பகுதி கதவு மூடப்பட்டது. விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்க வைப்பதற்காக சிறு துளை அமைக்கப்பட்டது. அதன் வழியாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குடத்தில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை தொட்டிக்குள் கொட்டி, சிலையை தண்ணீரில் மூழ்க வைத்து வழிபாடு செய்தனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் ஊர் விநாயகர் சக்தி வாய்ந்தவர். 45 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி வாட்டியபோது, இதே போல் பூஜை நடத்தினோம்; போதுமான மழை பெய்ததால், பயிர்களை காப்பாற்ற முடிந்தது. இந்தாண்டு மழையில்லாததால் பயிர்களை காக்க, மீண்டும் பூஜை செய்துள்ளோம். ஐந்து நாட்களுக்குள் மழை கண்டிப்பாக பெய்யும், என்றனர் உறுதியாக.