ஆர்.கே.பேட்டை: அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று அர்ச்சுனன் தபசு நடந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, அர்ச்சுனன் கம்பியில்லா ஒலிவாங்கி மூலம் (மைக்) கானம் பாடினார். ஆர்.கே.பேட்டை அடுத்த, தாமரைகுளம் கிராமத்தில் திரவுபதியம்மன் அக்னி வசந்த உற்சவம் கடந்த வியாழக்கிழமை துவங்கியது. தொடர்ந்து அர்ச்சுனன் வில் வளைப்பு, பகடை துகில் உறிதல் நடந்தன. நேற்று காலை அர்ச்சுணன் தபசு நடந்தது. கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனைமரத்தில் ஏறி அர்ச்சுனன் தபசு மேற்கொண்டார். தபசு மரத்தில் ஏறும்போது, அர்ச்சுணன் மந்திர கானங்களை பாடுவது வழக்கம். திருவிழா கூட்டத்தில் அர்ச்சுனன் பாடுவது பக்தர்களுக்கு தெளிவாக கேட்காது. இதையடுத்து நேற்று அர்ச்சுணன் கையில், கம்பியில்லா ஒலிவாங்கி (மைக்) கொடுக்கப்பட்டது. இதனால், ஒலிபெருக்கி வாயிலாக, அர்ச்சுனன் பாடிய கானம், பக்தர்களுக்கு மட்டும் இன்றி சுற்றியுள்ள பைவலசா, கட்டாரிகுப்பம், குட்டைகீழுர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் தெளிவாக கேட்டது. வரும் ஞாயிறு தீமிதி திருவிழா நடக்கிறது. மறுநாள் தர்மர் பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.