பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
ஓமலூர்: கருப்பூரில், மஞ்சள் முத்து மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா நடந்தது. கருப்பூர் உப்புக்கிணறு பகுதியில் உள்ள, மஞ்சள் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து, நேற்று, ஸ்வாமிக்கு சிறப்பு அபிசேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர், சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், பூங்கரகம், அக்னி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமானோர் பம்பை மேள இசைக்கேற்ப ஆடி வந்தனர். மாலையில், அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது. கருப்பூர் மஞ்சள் முத்து மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.