பதிவு செய்த நாள்
03
மே
2014
12:05
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சமீபத்தில் சூட்கேஸ் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இப்படி ஆபத்து சூழலில் உள்ள கோயிலில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ரூ.120 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், பாதுகாப்பு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய, தனியார் செக்யூரிட்டிகள், தரிசனம், அபிஷேகம், வின்ச், ரோப்கார், போன்ற கட்டண டிக்கெட்களை வழங்கும் பணிகளை மட்டுமே செய்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் வரும்போதும், விழாக்களிலும் மட்டுமே மலைக்கோயில் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் போன்ற இடங்களில், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்துகின்றனர். மற்ற நாட்களில் பக்தர்களிடம் எந்தவிதமான, சோதனையும் செய்வதில்லை. கடந்த டிச., 6 ல், பழநிகோயிலுக்கு, போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில், ஆயக்குடியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் "சூட்கேஸ் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக, வதந்தி பரவியது. மதுரையிலிருந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வந்து சோதனை செய்தபின், அதில் துணிகள் மட்டும் இருந்தன. தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டுவெடிப்பு நடந்ததையடுத்து, பழநி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மலைக்கோயில் படிப்பாதை, வெளிப்பிரகாரம், ரோப்கார் ஸ்டேஷன், யானைப்பாதை, வின்ச் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், பக்தர்களின், உடமைகளை சோதனையிட "மெட்டல் டிடெக்டர் அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.