பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சாக்கடை நீர் கலப்பதால் புனிதம் கெட்டு, பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலங்களில் ஒன்றான உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மாவிற்கு சாப விமோசனம் கிடைத்ததால், பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய பின், சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.இந்த தீர்த்த குளம், தற்போது பராமரிப்பின்றி, படிக்கட்டுகள் இடிந்துள்ளன. கருவேல செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. குளத்தை சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், பிரம்ம தீர்த்தத்திற்குள் கலந்து, புனிதநீர் மாசடைந்துள்ளது. வடக்குப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்துள்ளது. வெளியில் பரவிக்கிடக்கும் பாலிதீன் உட்பட குப்பை, குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், நீராட முடியாமல் தலையில் நீரை தெளித்துக் செல்கின்றனர். நான்கு படித்துறைகளுடன் இருந்த, பிரம்ம தீர்த்தம், ஆக்கிரமிப்பால் ஒரு படித்துறையாக மாறி விட்டது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், சிவ தலத்திற்கு பெருமை சேர்க்கும் புனித குளத்தில் சீரமைப்பு பணி நடைபெறாமல் இருப்பது பக்தர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
கோயில் நிர்வாக செயலாளர் வி.மகேந்திரன்: பிரம்ம தீர்த்த குளம் சீரமைப்புக்காக, மதிப்பீடு தயாரித்து, சுற்றுலா துறை மூலமாக நிதி கோரப்பட்டுள்ளது. நிதி வந்ததும், தூர் வாரி, மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை, தீர்த்த குளத்தில் விடக்கூடாது என மக்களை அறிவுறுத்தி உள்ளோம். மீண்டும் நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.