பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
தஞ்சாவூர்: தஞ்சை அருகே பூதலூரில் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்ற தேர்பவனி விழா வெகுவிமரிசையாக நடந்தது. தஞ்சையை அடுத்த பூதலூரில், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. நடப்பாண்டு, ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, ஆலயத்தின் முன்புறத்திலுள்ள திறந்தவெளி மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பூதலூர் மாதா ஆலய பங்குத்தந்தை ஞானதுரை தலைமையில் அருட்தந்தையர் மேத்யுக பூச்சியன், திமோதியுக பூச்சியன் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, சிறிய பல்லக்கை கிறிஸ்தவர்கள் சுமந்து ஊர்வலமாக வந்தனர். சூசையப்பர் சொரூபம் வைத்த சிறிய தேரும், மாதா சொரூபம் வைத்த பெரிய தேரும், மின் அலங்காரத்தில் மல்லிகை மலர் பந்தல் அமைத்து, பவனியை துவக்கியது. தொடர்ந்து, பூதலூர் நகரத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி வந்து, முடிவில் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்வர்கள் திரளாக பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.