பதிவு செய்த நாள்
07
மே
2014
01:05
வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் அகஸ்தியருக்கு சிவபெருமான், பார்வதி திருமண கோலக்காட்சி அருளும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், திருமண கோலக்காட்சி ஐதீக நிகழ்ச்சியாக, வருடம்தோறும் சித்திரை மாதம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, இதனையொட்டி, நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை திருமணக்கோலத்திலுள்ள ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமியின் திருவுருவத்துக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சந்தனம் அடுத்தாண்டு, ஸ்வாமிக்கு திருமண கோல காட்சி நடக்கும் வரை, களையப்படாமல், அப்படியே ஓராண்டுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி, ஸ்வாமி சன்னதியில் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு, ஒளிவெள்ளத்துடன் காட்சியளித்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து, நேற்று மதியம் 1 மணிக்கு திருமண கோலக்காட்சி அரங்கேறியது. இதில், ஸ்வாமி சன்னதி முன்பு, அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்வாமி முன்னிலையில் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதில், பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, தாம்பூலம், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.