பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
தேவாரம் : வீரபாண்டி திருவிழாவிற்கு, நேர்த்திகடன் செலுத்த வரும் பக்தர்களை, சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க நடவடிக்கை தேவை. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியுள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை நடக்கும் திருவிழாவில், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், மதுரை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் வருவார்கள். தீச்சட்டி எடுத்து, கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தப்படுகிறது. இதற்காக, உறவினர்களை அழைத்து விருந்து நடத்தப்படும். விழா துவங்கும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையன்று அதிகளவு பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த வருவார்கள். நேர்த்திகடன் செலுத்த வருபவர்கள், உறவினர்களை அழைத்து வர தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்கின்றனர். பயணிகள் வாகனம் கிடைக்காத பட்சத்தில், சரக்கு வாகனங்களை "புக்கிங் செய்து, உறவினர்களை அழைத்து செல்வார்கள். சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள், ஆட்டுக் கிடா மற்றும் சமையல் பொருட்கள் கொண்டு செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. "சீசன் நேரத்தில் கூடுதல் "டிரிப் ஓட்டுவதற்காக, அதிக வேகத்தில் சரக்கு ஏற்றும் வாகனத்தை ஓட்டுகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் பயணித்தால், உயிர் பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. டிராக்டர்களில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, நிலை தடுமாறி கவிழ்ந்து உயிர் பலி ஏற்படும். பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, போலீசாரும், போக்குவரத்து துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.