பதிவு செய்த நாள்
08
மே
2014
01:05
தஞ்சாவூர்: தஞ்சை அருகே பூண்டி மாதா ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர். தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை அடுத்து பூண்டி மாதா ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டு பெருவிழா கடந்த, 6ம் தேதி விமரிசையாக துவங்கியது. பூண்டி மாதாவின் சிறு சொரூபம் வைத்த பல்லக்கை கிறிஸ்தவர்கள் சுமந்து, ஊர்வலமாக வந்தனர். பின்னர், ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் கொடிமரத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, கொடியை புனிதம் செய்து, ஏற்றி வைத்து, ஆண்டு பெருவிழாவை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி துவக்கி வைத்தார். திருப்பலி நிகழ்ச்சியில் பேராலய அதிபர் செபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்வதர்கள் திரளாக பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை செய்தனர். வரும், 14ம் தேதி பூண்டி அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது என, பூண்டி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.