பதிவு செய்த நாள்
10
மே
2014
05:05
கூடலூர்: மே 14ல் கண்ணகி கோயில் விழா நடைபெறுவதைத் தொடர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் விழா, சித்ரா பவுர்ணமி தினமான, மே 14ல் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு செல்ல, குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையும், தமிழக வனப்பகுதி வழியாக பளியன்குடியில் இருந்து, 6.6 கி.மீ., தூரத்தில் நடந்து செல்லும் வகையில் மலைப்பாதையும் உள்ளது. கூடலூரில் இருந்து பளியன்குடி வரை செல்வதற்கு அரசு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல, அடிக்கடி ஜீப் வசதி உள்ளது. அன்றய தினம் காலை 5 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காலை 5 மணிக்கு, கோயிலில் பள்ளி உணர்த்தல், காலை 5.30 மணிக்கு மலர் வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறும். காலை 6 மணிக்கு யாக பூஜையும், 7 மணிக்கு மங்கலஇசையும், 8 மணிக்கு பொங்கல் வைத்து பிரசாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பகல் 11 மணிக்கு, அம்மனுக்கு பூஜித்த மங்கல நாண் மற்றும் வளையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். 12 மணிக்கு மணிமேகலை அமுத சுரபியில் உணவு வழங்கல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூமாரி விழா நடைபெறும். காலையில் இருந்து, மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் செய்கின்றனர். சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பு கருதி, பிளாஸ்டிக் பைகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.