பதிவு செய்த நாள்
14
மே
2014
12:05
கும்பகோணம்: கும்பகோணம், சாரங்கபாணி ஸ்வாமி கோவில் சித்திரை பெரிய தேரோட்டம், நேற்று நடந்தது. ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுவதும், தமிழ் வேதமாக கருதப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த தலம், பாடல் பெற்ற திருத்தலம் ஆகிய பெருமைகளுக்கெல்லாம் உரியதாக கும்பகோணம் சாரங்கபாணி ஸ்வாமி கோவில் திகழ்கிறது. மிகவும் பழமையான இத்திருக்கோவிலில், ஆராவமுதன் என்ற சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். இந்த பெருமாளை, ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். இக்கோவிலில், 500 டன் எடை பெரிய தேரும், சிறிய தேரும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சித்திரை திருவிழாவின் போது, பெரிய தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு, சித்திரை தேரோட்ட பெருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில் பெருமாள், உபயநாச்சியார்களுடன் வெள்ளியிலான இந்திர, சூரியபிரபை, சேஷ, கருட, ஹனுமந்த, மங்களகிரி, பின்னைமர, குதிரை வாகனங்களில் வீதிவுலா வந்து அருள்பாலித்தார்.
மே, 8ம் தேதி இரவு, ஓலைச்சப்பரத்தில் சாரங்கபாணி ஸ்வாமியும், சக்கரபாணி ஸ்வாமியும் வீதிவுலா வந்தனர். 12ம் தேதி, வெண்ணைத்தாழி சேவை நடந்தது. நேற்று காலை, ஆரவமுதன் உபநாச்சியார்களான பூமிதேவி, ஸ்ரீதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 8.30 மணியளவில் மங்களவாத்தியம் முழங்க திருத்தேரோட்டம் நடந்தது. கும்பகோணம் எம்.எல்.ஏ., சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன், நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர், துணைத் தலைவர் ராஜாநடராஜன், தேர் திருப்பணி குழுத் தலைவர் ராயாகோவிந்தராஜன், அமுதன் கைங்கர்ய சபா நிர்வாகிகள் சேதுமாதவன், கணேஷ், சத்தியநாராயணன், வாசுதேவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெகநாதன், துணை ஆணையர்கள் அசோக்குமார், கஜேந்திரன், உதவி ஆணையர் மாரியப்பன், கோயில் செயல் அலுவலர்கள் நிர்மலாதேவி, ராமச்சந்திரன், பொன்னழகு, ராதாகிருஷ்ணன், தக்கார் மதியழகன், தேர் வடம் பிடித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, கும்பகோணம் டி.எஸ்.பி., சுயம்பு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் செய்தனர்.