பதிவு செய்த நாள்
14
மே
2014
12:05
கரூர்: கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில், ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழச்சிகளை நடத்தி வருகின்றனர். "மாமூல் போலீஸார் இதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், சமீப காலமாக ஆபாச நடன நிகழச்சிகள் மீண்டும் பரவலாக நடத்தப்படுகிறது. சித்திரை மாதம், செல்லாண்டிபாளைம், சுக்காலியூர், புலியூர், தாந்தோணி, தோகைமலை, நெரூர் உட்பட பல்வேறு பகுதிகளில், கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், சென்னை, சேலம், கோவை போன்ற நகரங்களில் இருந்து அழகிகளை வரவழைத்து, அரை குறை ஆடையுடன், இரட்டை அர்த்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட வைத்தனர். அழகிகளின் ஆபாச நடனத்தால், பல்வேறு சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட துவங்கியது.
இதையடுத்து, சில நிபந்தனைகளுடன் போலீஸ் முன்அனுமதி பெற்று, ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்த வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில ஊர்களில், இந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் நள்ளிரவை தாண்டியும் குத்தாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. "மாமூல் போலீஸார், இதனை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் ஒருவர் கூறியதாவது: அந்தந்த பகுதி டி.எஸ்.பி.,க்கள் தான், ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். தற்போது, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், அவர்கள், அனுமதி வழங்குவது இல்லை. இருப்பினும், தோகைமலை அருகில் கூடலூர், கரூரில் அருகில் உள்ள வேடிச்சிபாளையம், செல்லாண்டிபாளையம் ஆகிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடனம் அரங்கேறியது. ஆளும் கட்சியினர் நெருக்கடி காரணமாக, போலீஸார் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கரூர் மாவட்ட எஸ்.பி., ஜோஸிநிர்மல்குமார் கூறுகையில், ""இப்போது தேர்தல் நடந்தை விதிமுறையில் நடைமுறையில் இருப்பதால் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், கண்டிப்பாக அனுமதி பெற்றே நடத்த வேண்டும், என்றார்.