பதிவு செய்த நாள்
15
மே
2014
02:05
குமாரபாளையம்: ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடந்தது. குமாரபாளையம் ராஜவீதியில், புதுக்பேட்டை ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், சித்ரா பவுர்ணமி அன்று, திருக்கல்யாண உற்சவம், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 7 மணிக்கு, காட்டூர் ராஜாராமன் வீட்டில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. காலை, 11.30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். அதேபோல், சேலம் மெயின் ரோடு, சவுண்டம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அன்னாதனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தம்பதி சமேதரராய் எழுந்தருளி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.