பதிவு செய்த நாள்
24
மே
2014
12:05
திருப்பூர் : திருப்பூர் விசாலாட்சி அம்மை உடனமர் விஸ்வேஸ்வரர் மற்றும் பூமிநீளா தேவி, கனகவல்லி தாயார் உடனமர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, வரும் 4ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு, செல்லாண்டியம்மன் கோவிலில் கிராம சாந்தி, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 5ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 6ம் தேதி, காலை 10.00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலை 6.30 மணிக்கு சுவாமி புறப்பாடு; 7ம் தேதி, அதிகாரநந்தி, சேஷ வாகனம், 8ம் தேதி, கற்பக விருட்ஷத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 9ம் தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட சேவை புறப்பாடு, 10ம் தேதி, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம் புறப்பாடு நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் 11ம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2.00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 12ம் தேதி, பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. மதியம் 2.00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடைபெறும். 13ம் தேதி, பரிவேட்டை; 14ம் தேதி தெப்பத்திருவிழா; 15ம் தேதி, மகா தரிசனம்; 16ம் தேதி, மலர் பல்லக்கு, மஞ்சள் நீராட்டு; 17ம் தேதி, திருவிழா விடையாற்றி உற்சவம் நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி, ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் தினமும் மாலை, பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரி, தேவார இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.