பதிவு செய்த நாள்
31
மே
2014
11:05
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் ஆண்டு தோறும் நடக்கும் கோயில் திருவிழாவில், தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பழைய போட்டிகளை கிராம மக்களுக்கு நடத்தி பரிசு வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தமிழர்களின் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம் கிராமம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புது அம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். இந்த விழாவில் கிராம மக்கள் வித்தியாசமான சிந்தனையோடு செயல்படுகின்றனர். தமிழகர்களின் பழமையான பழக்க வழக்கங்கள் இயந்திர வாழ்க்கையில் மறைக்கப்பட்டு வருகிறது. இதனை உலகுக்கு உணர்த்தும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகின்றனர். கரகாட்டம், குத்தாட்டத்திற்கு நோ: கிரமங்களில் கோயில் திருவிழா என்றாலே இரட்டை அர்த்த வசனங்களுடன் நாடகம், கரகாட்டம், குத்தாட்டம், ஆடலும், பாடலும், போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இளைஞர்கள் லயித்து விடுகின்றனர். இன்னும் பலர் மது போதையில் தகராறு செய்வதும் உண்டு. இது போன்ற சம்பவங்களுக்கு அயன் வடமலாபுரம் தங்கள் கிராமத்தில் அனுமதிப்பதில்லை.
பழமை பண்பாட்டிற்கு மரியாதை: கிராமங்களில் இளவட்டக்கல் தூக்குதல், மாப்பிள்ளைக்கு பெண் கொடுப்பவர்கள் இது போன்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்துவதுண்டு. பெண்களுக்கு திருகை சுற்றுதல், உரலில் நெல் குத்துதல் போன்றவைகள் இயந்திர பயன்பாடுகளால் பலர் இதனை மறந்து விட்டனர். இதனை இன்றைக்கும் மாறாமல் அயன் வடமலாபுரரம் கிராம மக்கள் கோயில் திருவிழாவில் போட்டியாக நடத்துகின்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இளவட்டக்கல் சாதனை: இளவட்டக்கல் தூக்குவதில் 62 வயதான ஜெகநாதன் சாதனை படைத்தார். ராஜேஸ் என்பவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது.மகேந்திரன், வினோத் ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர். இதே போல் பெண்கள் திருகை சுற்றுதல், உரலில் நெல் குத்துதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பழமை, பண்பாடு மாறாமல் கிராம கோயில் திருவிழாவில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கும் முன் மாதிரி கிராமம் அயன்வடமலாபுரம், என்றால் மிகையாகாது.