பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
பவானி: பவானி, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில், வரும், ஒன்பதாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதனால், கோவில் முன்பகுதி ராஜகோபுரம் முதல், பெருமாள் கோவில், வேதநாயகி அம்மன் சன்னதி, சங்கமேஸ்வரர் சன்னதி உட்பட பல இடங்களில், பழங்காலத்தில் கட்டிய, கருங்கல் கட்டிடத்தில் பராமரிப்பு பணி நடந்தது. சில கட்டிடங்கள் அழுக்கு, கரைகள் படிந்து காணப்பட்டன. அவற்றை, நவீன முறையில் தண்ணீர் பீச்சி அடித்து, பின், வார்னிஷ் அடிக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தரைத்தளங்களும், இதுபோல புதுப்பித்தும், தண்ணீர் மற்றும் கெமிக்கல் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் உள்பகுதி, வெளிபுற பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு பின், வார்னிஷ் அடிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கல்தூண், சிற்பங்களை, அசுத்தப்படுத்தாமலும், அவற்றின் மீது எண்ணெய், திருநீறு, குங்குமம் போன்றவற்றால் அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.