பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
திருப்பூர் : திருப்பூர், பார்க் ரோட்டில் உள்ள குருராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. கடந்த 1987ல், திருப்பூர் பார்க் ரோட்டில், நொய்யல் கரையோரம் குருராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவன் கோவில் கட்டப்பட்டது. சீதாராமர், ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரா சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு நடந்து வந்தது. கோவில் வளாகத்தில், லட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களுக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. காலை 6.00 மணிக்கு ஹரிவாயு ஸ்துதி, ராகவேந்திர அஷ்டாக்ஷ மந்திர ஹோமங்களுடன் பூஜை துவங்கியது. காலை 8.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, காலை 10.00 மணிக்கு பிரதிஷ்டாபனம் நடந்தது. சரியாக, காலை 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ராகவேந்திரர், லட்சுமி நரசிம்மர், சீதாராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள பேஜாவர் மடாதிபதி, விஸ்வேஸ தீர்த்த சுவாமிகள், கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜையை நிகழ்த்தி வைத்தார். அதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இன்று முதல் வரும் ஜூலை 19 வரை, மண்டல அபிஷேக பூஜை நடைபெறும். பூஜை கட்டளை செய்ய விரும்புவோர், 0421 - 2232 222 என்ற எண்களில், குரு ராகவேந்திரா சேவா சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.