பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை, ஏழாம் தேதி நடக்கிறது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிக்கான, கால்கோள் விழா நேற்று நடந்தது. அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்றார். சென்னிமலை மலை மீது அமைந்துள்ள முருகன், சுப்பிரமணிய மூர்த்தம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு தான் உலக முழுவதும் உள்ள, முருக பக்தர்கள், தினமும் பரிணாமம் செய்யும், கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்தது. மேலும், அருணகிரி நாதருக்கு, முருகப்பெருமாள் காட்சி கொடுத்து, படிக்காசு நல்கிய திருதலம், சென்னிமலை முருகன் கோவிலாகும். இங்கு கடந்த, பத்தாண்டுகளுக்கு மேலாக, பல கோடி பொருள் செலவில், ராஜகோபுரம் உட்பட, பல திருப்பணிகள் நடந்து வருகிறது. இத்திருப்பணிகள் நிறைவு பெற்று, தற்போது கும்பாபிஷேம், ஜூலை, ஏழாம் தேதி நடத்த, தேதி முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தின் முக்கிய பணியாக, யாகசாலைகள் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான கால்கோள் விழா, மலை மீது நேற்று காலை நடந்தது. மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பூஜைகள் நடந்து, கால்கோள் விழா நடந்தது. இந்த விழாவில், சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், எம்.எல்.ஏ.,க்கள் காங்கேயம் நடராஜ், மொடக்குறிச்சி கிட்டுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் யூ.ஆர்.சி., கனகசபாபதி, வக்கீல் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைதலைவர் மணிமேகலை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சேமலையப்பன், டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம், சிரகிரி டெக்ஸ் தலைவர் தம்பித்துரை, சுப்புசாமி, உட்பட, நான்கு நாட்டுகவுண்டர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் பசவராஜன் தலைமையில், தலைமை எழுத்தர் ராஜீ, எழுத்தர் பாலசுப்பிரமணியம், கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகம் அன்று, அன்னதானம் வழங்க ஏதுவாக, மலை அடிவாரத்தில் உள்ள, செங்குட்டை மைதானத்தில், ஒரே நேரத்தில், 5,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில், பந்தல் அமைக்கும் பணிக்கும், கால்கோள் விழா நடந்தது.