பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
12:06
பவானி: பவானி, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில், வரும், ஒன்பதாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா, மிக பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக, கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பணிகள் துவங்கி, ராஜகோபுரம், கிழக்கு, தெற்கு கோபுரம் உட்பட சன்னதிகளில், மராமத்துப்பணிகள் நடந்து, புதுப்பிக்கப்பட்டது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கும், ராஜகோபும், மூலவர் விமானங்கள், பரிவார விமானங்கள் அனைத்துக்கும், ஒன்பதாம் தேதி காலை, ஆறு முதல், 7.30 மணிக்கள் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழாவுக்காக, நேற்று காலை, 7.30 மணிக்கு, வேதநாயகி அம்மன் சன்னதி முன், மூத்த பிள்ளையார் வேள்வி, பசு வழிபாடு, யானை வழிபாடு, கடவுளர் அனுமதி பெறுதல், ஒளி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகளை, கோவில் குருக்கள் ஞானமணி, சுப்ரமணி, சுவாமிநாதன், பாலாஜி சிவம், மணிகண்டன் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க, பூஜையுடன் துவங்கினர். பவானி எம்.எல்.ஏ., நாராயணன், பவானி நகராட்சி தலைவர் கருப்பணன், ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், குமாரபாளையம் நகராட்சி தலைவர் தனசேகரன் மற்றும் அக்னி ராஜா, வக்கீல் கணேசன், ரியல் எஸ்டேட் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.