பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
01:06
ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை!ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, ராமேஸ்வரம் கோவில் நடை வரும், 7 ம் தேதி, காலை 7:00 மணிக்கு மூடப்படுகிறது. அன்று காலை பக்தர்கள் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட முடியாது. ராமேஸ்வரம் கோயில் இணை கமிஷனர் சி.செல்வராஜ் கூறியதாவது: இக்கோயிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, வரும், 6 ம் தேதி, ராமர் பல்லக்கில் புறப்பட்டு, ராவணனை சூரசம்ஹாரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டதும், ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜை நடக்கிறது. அதன்பின், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காலை, 7:00 மணிக்கு ராமர் புறப்பாடாகி, கோதண்டராமர் கோயில் செல்கிறார். அதைத்தொடர்ந்து, கோயில் நடை மூடப்படும். கோதண்டராமர் கோயிலில், விபீஷணருக்கு ராமர் பட்டாபிஷேகம் சூட்டுகிறார். மீண்டும், கோதண்டராமர் கோயிலில் இருந்து புறப்பட்டு, மாலையில், ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகிறார். அதன்பின், மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். எனவே, வரும், 7 ம் தேதி காலையில், கோவிலில் புனித நீராடி, தரிசனம் செய்வதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். அன்று மாலை, புனித தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்யலாம். 8 ம் தேதி ராமலிங்க பிரதிஷ்டை நடைபெறுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.