பதிவு செய்த நாள்
03
ஜூன்
2014
02:06
ஓமலூர்: ஓமலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம், 3,000 ஏக்கர் உள்ளது. அந்த கோவில் நிலம் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஓமலூர் அருகே ஊ.மாரமங்கலம் சாமுண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர், அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுத்திருந்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, கோவில் ஆய்வாளர் கல்பனாதத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓமலூர் ஊ.மாரமங்கலம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள ஊ.மாரமங்கலம் மாரீஸ்வரர் கோவில், செம்மாண்டப்பட்டி, ஏனாதி சென்றாய பெருமாள் கோவில்களில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு கூறியதாவது: ஓமலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதையடுத்து, சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களை நேரில் பார்வையிட்டு, அதற்கான ஆவணங்களையும் வைத்து ஆய்வுப் பணியினை தொடங்கியுள்ளோம். முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஆக்கிரமிப்பு பற்றிய விவரங்கள் தெரியவரும். ஆய்வுக்கு பின்னர் தெரியவரும், ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.