திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள உற்ஸவருக்கு மலையப்ப சுவாமி என்று பெயர். ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவருக்கே, தினமும் கல்யாண உற்ஸவம் நடக்கிறது. இவரே விழாக்காலத்தில் மாடவீதியில் பவனி வருபவர். இவரைப் போலவே, சிறிய அளவில் போக ஸ்ரீனிவாசர் என்றொரு உற்ஸவர் சிலையும் இங்கு உண்டு. தினமும் இரவு ஏகாந்த சேவையாக பள்ளியறையில் துயில்வதும், அதிகாலையில் சுப்ரபாதம் கேட்டு பள்ளி எழுந்தருள்பவரும் இவரே. இரவில் தங்கத் தொட்டிலில் வெல்வெட் மெத்தையில் போகஸ்ரீநிவாசரை படுக்க வைத்து, பால், முந்திரி, திராட்சை நைவேத்யம் செய்வர். நைவேத்யம் முடிந்ததும், அங்கிருக்கும் தீபத்தை சிறு ஒளியுடன் எரியச் செய்வர். பின், அன்னமாச்சார்யாரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் பாடுவர். அதன் பின்பே இவர் துயில்வதாக ஐதீகம். பிறகு திரையிடப்பட்டு சந்நிதியை சாத்துவர்.