பதிவு செய்த நாள்
05
ஜூன்
2014
11:06
செங்கல்பட்டு : சிங்கப்பெருமாள் கோவிலில், பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில், கருடசேவை நேற்று கோலாகலமாக நடந்தது. சிங்கப்பெருமாள் கோவிலில், புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இவ்விழா கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், மூன்றாம் நாளான நேற்று காலை, கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 5:30 மணிக்கு, கருட வாகனத்தில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் சுவாமி எழுந்தருளி கோபுர தரிசனம், மகா ஆரத்தி நடந்தது.பின்னர், வீதியுலா புறப்பட்டு மாடவீதிகள் வழியாக சென்றார். சிங்கப்பெருமாள்கோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர், சுவாமியை தரிசனம் செய்தனர்.