எமனேஸ்வரத்தில் கும்பாபிஷேகம்: நூற்றாண்டுக்கு பின் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2014 11:06
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் மறுகரையில் உள்ள எமனேஸ்வரம், பொன்னால் பூண்முலை உமையாள் சமேத எமனேஸ்வரமுடையவர் கோயிலில், நூற்றாண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடந்தது. எமதர்மராஜன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, மல்லிகார்ஜூனபுரம் என்று அழைக்கப்பட்ட எமனேஸ்வத்தில், சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர், அவரது சாபம் நீங்கி மீண்டும் எமலோக பதவியை அடைந்தார். பல நூற்றாண்டுகளுக்கு பின்பு, கோயில் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஜூன் 5ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. தொடர்ந்து மூலவர் எமனேஸ்வரமுடையவருக்கு பஞ்சாக்கினி குண்டங்கள் அமைத்து, நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, 8.10 மணிக்கு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.