பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
02:06
சேலம்: சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியில், நேற்று நடந்த காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியில், புதிதாத கட்டப்பட்ட காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவுக்கு, மே, 18ம் தேதி காலை, 7.30 மணியளவில், முகூர்த்தகால் நடப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு, காலை, மாலை இருவேளையும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கடந்த, 6ம் தேதி முதற்கால யாகபூஜையும், 7ம் தேதி திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை, 6.30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது. இரவு, 7 மணிக்கு மேல் ஸ்வாமிக்கு எந்திர பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு, மங்கள இசையுடன், நான்காம் கால யாகபூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. காலை, 7.40 மணிக்கு ராஜகோபுரம், மூலாலய கோபுரம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, காலை, 8.15 மணிக்கு மேல் வேம்பரசு விநாயகர், காளியம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிப்பட்டனர். காலை, 10 மணியளவில், மஹா அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.