பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
05:06
இன்றைய இயந்திர கதியில், நல்லது-கெட்டதை ஆராய்ந்து செயல்பட சில நேரங்களில் மனம் மறுக்கிறது. வேத நூலான சுக்ர ஸ்மிதியை ஒட்டி எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவை என்னும் நன்னெறி காட்டும் நூல், வாழ்வில் நாம் எப்படி இருக்கவேண்டும், இருக்கக் கூடாது என்பதைக் கூறுகிறது. அவற்றைப் படித்து, இயன்றவரை கடைப்பிடித்து வாழலாமே! நன்றியுடன் நடந்து கொள், பொறாமைப் படாதே. ஒழுக்கம் இல்லாதவர்களுடன் உறவாடாதே. கால தாமதமின்றி குருவுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும். கல்வி மற்றும் யாகத்தைக் கருத்துடன் பயில வேண்டும். செய்ய இருக்கும் காரியத்தை முந்தைய நாள் அதிகாலையிலேயே திட்டமிட வேண்டும். எச்சில் கையுடன் பசு, அந்தணன், நெருப்பு, தெய்வப்படங்கள், பெரியோர், குரு, வீட்டின் மூத்தவர்கள், சாது ஆகியோரைத் தொடக் கூடாது! எச்சில் கையோடு சூரியன், சந்திரன், நாய், நட்சத்திரம் ஆகியவற்றைப் பார்க்கக் கூடாது. எச்சில் கையுடன் படிக்கவோ மந்திரங்கள் சொல்லவோ கூடாது.
அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, நீராடி, வீட்டுப் பெரியோரை வணங்க வேண்டும். பின்பு கோயில் சென்று நின்று வணங்க வேண்டும். மாலையில் கோயில் சென்று உட்கார்ந்து பிரார்த்திக்க வேண்டும். காலையில் எழுந்ததும், கெட்ட கனவு கண்டதும், உண்டதை வாந்தியெடுத்ததும் உடனே குளித்துவிட வேண்டும். நீராடும்போதும், சாப்பிடும்போதும் இரட்டை உடை, சமைக்கும்போது மூன்று உடை என்ற கணக்கி<லும் உடை உடுத்த வேண்டும். உண்ணுமுன் நீராடல் அல்லது கை, கால் கழுவ வேண்டும். கிழக்கு நோக்கி உணவு உண்பது சாலச் சிறந்தது. துக்கம், தீட்டு முதலிய காரணங்களால் கிழக்குக்கு விலக்கு என்றால், வேறு திசை நோக்கி உண்ணலாம். வீட்டில் முதியோர், விருந்தினர் இருந்தால் அவர்களுக்குக் கொடுத்த பின்பே நாம் உண்ண வேண்டும். தலையில் தேய்த்த எண்ணெயை உடலின் மற்ற உறுப்புகளில் தேய்க்கக் கூடாது. பிறர் உடையைத் தொடக்கூடாது. நீரில் தங்கள் நிழலைப் பார்க்கக் கூடாது. குளம், நதியில் குளிக்கும்போது அவற்றில் எச்சில் <உமிழக் கூடாது.
ஐம்பூதங்கள், பசு, அந்தணன், சந்திர-சூரியர்கள் ஆகியோரை இகழ்பவன் விரைவில் கேடு அடைவான். அரசர், குரு உபாத்தியாயர், தாய்-தந்தை மற்றும் மூத்தோர் ஆகியோரை தெய்வமாகத் தொழ வேண்டும். திருமணப் பந்தலின் கீழ் துடைப்பம், கரிப்பானை, தூசு, அசுத்தம் ஆகியவை இருக்கக் கூடாது. அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி, வீட்டு விலக்கு நாட்கள், பூகம்பம், இடி முழங்கும் வேளைகளில் வேதம் ஓதக் கூடாது. காலையிலும் மாலையிலும் சூரிய ஒளியைப் பார்க்கக்கூடாது. பயனில்லாத சொல், வஞ்சனை ஆகியவற்றை அறவே வெறுக்க வேண்டும். ஒரு பொருளை வீசி எறிதல், கல் எறிதல், தூரத்தே செல்பவரை அழைத்தல் ஆகியவை தவறு. போர்க்களம், வேசையர் (வேசியர்) வீடு ஆகிய இடங்களில் தங்கக்கூடாது. மழை நீரில் ஓடக் கூடாது. பகல் பொழுதில் தூங்கக் கூடாது. விளக்கை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கோயிலிலும் தெய்வத் திருவிழாக்களின் போதும் பெரியவர்களைக் கண்டால்கூட நமஸ்கரிக்கக் கூடாது. இன்னும் எவ்வளவோ உண்டு. நல்ல இயல்புகளான இவற்றைக் கடைப்பிடிக்க முயற்சிப்போமா...?