பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
02:06
புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையின் போது, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புரியில், பிரசித்தி பெற்ற ஜெக நாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நடக்கும் ரத யாத்திரை, மிகவும் பிரபலம். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த ரத யாத்திரையில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை, இம்மாதம், 29ல் துவங்குகிறது. யாத்திரையின்போது, பக்தர்கள் சிலர், ரதங்கள் மீது ஏறி, சாமி சிலைகளை தொடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீப காலமாக, இவ்வாறு ஏறும் பக்தர்கள் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. கோவில் பூசாரிகள், இதை ஏற்க மறுத்தனர். இந்த நடைமுறை, நீண்ட நாட்களாக பின்பற்றப்படுகிறது. இதில், கட்டுப்பாடு விதிக்க கூடாது என, வாதிட்டனர். இதையடுத்து, கோவில் நிர்வாகத்துடன், போலீசார் மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில சட்ட அமைச்சர் அருண் குமார் சாகு கூறுகையில், ரத யாத்திரையின் போது, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ரதம், நிலைக்கு திரும்பியதும், பக்தர்கள் ரதத்தின் மீது ஏறலாம், என்றார்.