பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
02:06
திருப்பூர் : பக்தர்கள் ஓம் நமசிவாயா கோஷம் முழங்க, திருப்பூரில் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கடந்த 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமி வீதி உலா, சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு, விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், சோமாஸ்கந்தருடன் திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4.15 மணிக்கு, விஸ்வேஸ்வரர் வீற்றிருந்த தேரை, கலெக்டர் கோவிந்தராஜ் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள், "ஓம் நமசிவாயா கோஷம் முழங்கினர். தேர் நிலையை விட்டு நகர்ந்தது. பக்தர்கள், கூட்டத்துக்கு மத்தியில், அலங்கரிக்கப்பட்ட தேர், ஆடி, அசைந்து வந்தது. தேரோடும் வீதிகளான, ஈஸ்வரன் கோவில் வீதி, பெரிய கடை வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் வீதி வழியாக, மாலை 6.25 மணிக்கு, நிலையை அடைந்தது. தேருக்கு முன், பன்னிரு திருமுறை வாசிக்கப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பூ மார்க்கெட் பகுதியில் பூக்கள் பொழிந்து விஸ்வேஸ்வரருக்கு வரவேற்பு அளித்தனர். விஸ்வேஸ்வரர், தேருக்கு முன், விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தரதேவர் ஆகியோர் எழுந்தருளிய சிறிய தேரை, குழந்தைகள் மற்றும் பெண்கள் இழுத்துச் சென்றனர். திருப்பூர் சிவனடியார்கள் பக்தர் பேரவை சார்பில், பெண்கள் கோலாட் டம், கும்மியாட்டம் ஆடிச்சென்றனர். ஒரு குழுவினர் கயிலாய வாத்தியம் வாசித்து சென்றனர்; சிவ தாண்டவம் ஆடப்பட்டது. சிறுவர்கள், திருஞான சம்மந்தர், திரு நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் வேடம் அணிந்து சென்றனர். தேரோடும் வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இன்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது; பிற்பகல் 3.30 மணிக்கு, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.