பதிவு செய்த நாள்
13
ஜூன்
2014
12:06
பொன்னேரி: திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த இடத்தில், தருமசாலை, ஞானசபையுடன் கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார், பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தில் பிறந்தார். அவரது நினைவாக, சின்னகாவணத்தில் நினைவு இல்லம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. நேற்று முன்தினம், தருமசாலை திறப்பு விழாவும், நேற்று ஞான சபை திறப்பு விழா மற்றும் சத்திய ஞான தீபம் ஏற்றுவித்தல் நடந்தது. காலை, 7:00 மணிக்கு குரு ஞானசபையில் நன்னீர் குடமுழுக்கு விழாவும், அதை தொடர்ந்து, சத்திய ஞான சபை திறப்பு விழாவும் நடந்தது. காலை, 7:30 மணிக்கு, அரு ட்ஜோதி சபையின் ஜோதியுடன் இணைய செய்வித்தல் நடந்தது. அதையடுத்து சன்மார்க்க கொடி ஏற்றுவித்தலும், தொடர்ந்து, சொற்பொழிவும் நடந்தது. வடலுார், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சன்மார்க்க குழுவினர் விழாவில் பங்கேற்றனர்.